
மகாபாரதத்தில் கிருஷ்ணன்
மகாபாரதத்தில் கிருஷ்ணன், பண்டைய பரத கண்டத்தின் காவியமான மகாபாரதத்தில், கிருஷ்ணரின் அரசியல் தந்திரங்கள், பகவத் கீதை உபதேசம் மற்றும் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு ஆற்றிய உதவிகள் குறித்து கூறப்படுகிறது. மதுராவை தலைநகராக் கொண்ட சூரசேன நாட்டின் கொடுங்கோல் மன்னரும், சொந்த தாய்மாமனுமாகிய கம்சனை கொன்று, தன் தாய்வழி தாத்தாவும், யது குல மன்னருமான உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியதில் பாலகிருஷ்ணரின் பங்கு முக்கியமானதாகும். வலுமிக்க மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் மற்றும் காலயவனின் தொடர் அச்சுறுத்தல் காரணாமாக யது குலத்தின் பிரிவினர்களான விருஷ்ணிகள், போஜர்கள், குக்குரர்கள், அந்தகர்கள் உள்ளிட்ட 18 கிளைக் குழுவினர்கள், பரத கண்டத்தின் மேற்கிலும், மத்தியப் பகுதிகளிலும் குடியேறி, போஜ நாடு, ஆனர்த்தம், விதர்ப்பம், மத்சயம், சால்வம், சேதி நாடு போன்ற பகுதிகளை ஆண்டனர். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, சௌராஷ்டிரா தீபகற்பத்தின் கடற்கரையில் துவாரகை எனும் புதிய நகரை நிறுவி கிருஷ்ணரைச் சார்ந்த விருஷ்ணிகள் ஆண்டனர். குரு குல குரு நாட்டின் கௌரவர்களின் பங்காளிகளும், இந்திரப்பிரஸ்த நாட்டு ஆட்சியாளர்களுமான பாண்டவர்களுடன் கிருஷ்ணர் நல்லுறவை வளர்த்துக் கொண்டதால் யாதவர்களின் அரசியல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.